Tuesday, August 6, 2019

சுயநலம்





தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்” என்று கதை சொல்லலாயிற்று:

மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.
தன்னுடைய  நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன.

அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார்.
வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார்.

ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!”

ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான்.

ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது.

அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான்.

“இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை.

உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார்.

பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர்.
வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர். அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள்.

“யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான்.

உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான்.


மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான்.வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி!  இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான்.

ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார்.

ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர்.

தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான்.

இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு  உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது.

குணசேகரன் கதை





தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதை தன் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா, உன்னைப் போல் சிலர் வாழ்க்கையில் லட்சியவாதியாகத் திகழ்பவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைய அரும் முயற்சி செய்வார்கள்.ஆனால் சிலர் வாழ்க்கையில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் ஞானிபோல் திரிபவர்கள் திடீரென தடம்மாறி பயங்கர முயற்சி செய்து பல ஆண்டுகளாய் அடைய நினைத்ததை சில நாள்களிலேயே பெற்றுவிடுவர். அப்படிப்பட்ட குணசேகரனின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்றது.
 
விராக நாட்டை ஆண்டு வந்த சந்திரவர்மன் என்ற சிற்றரசருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். பெரியவன் குலசேகரன் இளையவன் குணசேகரனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தான். சிறு வயது முதல் தான் மன்னனாவது பற்றி குலசேகரன் கற்பனை செய்வதுண்டு. தனக்கு சமமான அந்தஸ்து படைத்தவர்களுடன் மட்டுமே பழகுவான். ஆனால் குணசேரகன் ஆசாபாசங்கள் அற்றவன். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஆட்சிபுரியும் ஆசை சிறிதுமில்லை.

இருவருடைய பிறந்தநாளையும் சந்திரவர்மர் மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அவ்வாறு அவர்களின் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவர்கள்இருவருக்கும் ஒரு கருடனின் பொம்மை பரிசாகக் கிடைத்தது. அதை அனுப்பியவர் சந்திரவர்மரின் குலகுரு சம்புநாதர்! அந்த பொம்மை பெரிதாக இருந்தது. அது மட்டும்இன்றி, அதன் காதருகில் பொருத்தப் பட்டிருந்த சாவியைத் திருகினால் அது சற்று நேரம் வானில் பறந்து சென்று திரும்பியது. அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்த முடியும்.
 
தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பொம்மையை எடுத்துக் கொண்டு இருவரும் நந்தவனத்திற்குச் சென்றனர். முதலில் குலசேகரன் அதன் மீதேறி அமர்ந்து சாவியை முடுக்க, அது பறந்தது. சற்று நேரம் பறவையில் பறந்து களித்தபின், தன் தம்பிக்கு அதை அளித்தான். அப்போது அரண்மனை வேலைக்காரி ஒருத்தியின் மகனான சாரதி அந்தப் பறவையில் தானும் அமர்ந்துப் பறப்பதற்கு விரும்பினான்.
 
அவனுக்கு அது தகுதியற்ற ஆசை என்று அவன் தாய் உணர்த்தினாள். அதைத் தற்செயலாக கவனித்த குணசேகரன் அவளிடம் “உன் மகன் சாரதி எனக்கு சமமான வயதுடையவன். இந்த வயதில் இத்தகைய ஆசை தோன்றுவது நியாயமே! ஆகவே, பொம்மை மீது அமர்ந்து பறக்க அவனுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் பறவை மீது ஏறாமல் சாரதியை ஏறச் சொன்னான். அதைக்கண்ட குலசேகரன் ஓடி வந்து அவனைத் தடுத்தான்.
 
அவன் செய்கையை அனைவரும் ஆதரித்தது குணசேகரனுக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. “சாரதி குதிரையில் உட்காரக்கூடாது என்றால் நானும் அதில் உட்கார மாட்டேன்” என்ற குணசேகரன் “நான் குலகுரு சம்புநாதரிடம் சிஷ்யனாகச் சேர்ந்து, இதேபோல் ஒரு பொம்மையைப் படைத்து அதில் சாரதியை உட்காரச் செய்வேன்” என்றான்.
அப்போது, சந்திரவர்மருக்கும் அதே யோசனை தோன்றியது. தன் புதல்வர்கள் இருவரையும் தன் குருகுல சம்புநாதரிடம் சீடர்களாக அமர்த்தி ராஜநீதி, பொறியியல், பொருளாதாரம் போன்ற அறிவியல் பாடங்களைக் கற்கட்டும் என்று எண்ணி, சம்புநாதரின் குருகுலத்தில் சேர்த்தார். சேர்ந்த நாள் முதல், குலசேகரன் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள, குணசேகரன் பொறியியலில் மிக்க ஆர்வம் காட்டினான். சில நாள்களில் குணசேகரன் தான் கூறியது போல் ஒரு கருட பறவையைத் தயாரித்து அதில் சாரதியை ஏறச் சொன்னான். அவனுடைய சமத்துவ மனப்பான்மையைக் கண்டு வியந்து பாராட்டிய சம்புநாதர், “நீ சாதாரண மனிதன்னல்ல, நீ ஒரு மகான்!” என்று விமரிசனம் செய்தார்.

குருகுல சம்புநாதரிடம் கல்வி பயின்று முடித்தபின் இருவரும் அரண்மனை திரும்பினர். ஆனால் இருவரின் போக்கும் முற்றிலும் வேறுபட்டிருந்ததைக் கண்டு கவலையுற்ற சந்திரவர்மர் சம்புநாதரிடம், “குலசேகரன் தங்களிடம்இருந்து அரசியலை நன்குக் கற்றுக் கொண்டு விட்டான் ஆனால் குணசேகரன் அரசியலைப் பற்றிக் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லையே!” என்றார் மன்னர்.
 
“அவனுக்கு ஆட்சி புரிவதில் ஆர்வமில்லை. அதனால்தான் அவன் அரசியலை ஆர்வத்துடன் கற்கவில்லை” என்றார் சம்புநாதர். “குருநாதரே! என் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவனை மன்னன் ஆக்க விரும்புகிறேன்” என்றார் சந்திரவர்மர். ஆனால் சந்திரவர்மருடைய யோசனை அவருடைய தந்தைக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் சரியாகத் தோன்றவில்லை.
 
ஆகையால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் சந்திரவர்மர் அயல் ராஜ்யத்தின் மீது படையெடுத்து, வெற்றி கண்டு, அதை குணசேகரனுக்கு உரிமையாக்கி விடலாம் என்று கருதினார்.அப்போது, விசால ராஜ்யத்து இளவரசி சந்திரகலாவின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டு, அதற்கு பல நாட்டு இளவரசர்கள் அழைக்கப்பட்டுஇருந்தனர். உடனே, மன்னர் மூத்தவன் குலசேகரனுக்கு பதிலாக குணசேகரனையே சுயம்வரத்திற்கு அனுப்ப எண்ணினார். சந்திரகலா விசாலராஜாவிற்கு ஒரே பெண்! அதனால், அவளை மணம் புரிந்தால், குணசேரன் எதிர்காலத்தில் விசாலராஜ மன்னன் ஆகிவிடுவான் என்ற நப்பாசைதான் காரணம்! அதைப்பற்றி மன்னர் சந்திரவர்மர் குணசேகரனிடம் கூறியபோது, அவனும் முதலில் சுயம்வரத்திற்குச் செல்லவே விரும்பினான்.

ஆனால் குலசேகரன் சந்திரகலாவை விரும்புவதையறிந்த அவன், உடனே தன் விருப்பத்தை கைவிட்டு விட்டாள். அதனால் குலசேகரன் மட்டும் சுயம்வரத்திற்குச் சென்றான்.
பல ராஜ்யங்களில் இருந்து மன்னர்களும், இளவரசர்களும் சந்திரகலாவின் கரம் பற்ற விரும்பி சுயம்வரத்தில் கூடியிருந்தனர். சந்திரகலா தன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்த போது, திடீரென ஒருவன் முன்னே வந்து அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு, “என் பெயர் மித்ரபிந்தன்! நான் சந்திரகலாவை மிகவும் நேசிக்கிறேன். அவள் எனக்குத்தான் உரியவள்! அதனால் நான் இவளை என்னுடைய மகாபர்வத ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு வீரம் இருந்தால், போரில் என்னைத் தோற்கடித்தப் பிறகு, சந்திரகலாவை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சவால் விட்டுவிட்டு, அங்கு தயாராக இருந்த தன் குதிரைமீது அவளை பலவந்தமாக ஏற்றிக் கொண்டு, விரைந்து வெளிஏறினான்.
 
சந்திரகலாவின் தந்தை வீரகுப்தர், தன் மகளை கயவன் மித்ரபிந்தனிடம்இருந்து மீட்டு வரும் இளவரசனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதுடன், தன் ராஜ்யத்தையும் அளிப்பதாக அறிவித்தார். உடனே சில நாள்களிலேயே, பல மன்னர்கள் மகாபர்வதத்தின் மீது படையெடுத்து, சந்திரகலாவை மீட்க முயன்றனர்.
 
ஆனால், மலைப்பிரதேசமான மகாபர்வத ராஜ்யத்தோடு போரிடுவது மிகக் கடினமாக இருந்தது. படைஎடுத்துச் சென்ற மன்னர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அவ்வாறு, போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களில் குலசேகரனும் ஒருவன்!

தன் சகோரதன் கொல்லப்பட்டதையறிந்த குணசேகரன் மித்ரபிந்தன் மீது தானே போர்தொடுக்க முடிவு செய்தான். ஆனால், மற்றவர்களைப் போல் உடனே படையெடுத்துச் செல்லாமல், முதலில் மித்ரபிந்தனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முற்பட்டான்.
மித்ரபிந்தன் மகாபர்வதக் கோயிலின் அம்மன் ருத்ரபைரவியை சிறு வயது முதல் ஆராதனை செய்து, அம்மனிடமிருந்து பல விசேஷ சக்திகளைப் பெற்றிருந்ததாகத் தெரிந்து கொண்டான். ஒருமுறை ருத்ரபைரவி அவனுடைய கனவில் தோன்றி தனக்கு இரத்த தாகம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறு மன்னர்களை அவளுக்குப் பலியிட்டால், அவன் மகா பலம் பொருந்தியவனாகத் திகழ வரம் தருவதாகவும் கூறினாளாம்! ருத்ரபைரவியின் சூலாயுதத்தைக் கொண்டு மித்ரபிந்தனை யாராவது தாக்கினால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் கூறினாள்.
 
மேற்கூறிய தகவல்களை அறிந்த பிறகு, குணசேகரன் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டபின், அவன் தனியாக மாறுவேடத்தில் மகாபர்வதம் சென்றான். ஒருநாள் நள்ளிரவில், மித்ரபிந்தன் சந்திரகலாவுடன் ருத்ரபைரவியின் கோயிலுக்குச் சென்றபோது, அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். அம்மனின் சன்னிதிக்கு மித்ரபிந்தன் சென்றதும் குணசேகரன், விரைந்து கருவறைக்குள் புகுந்தான். அம்மனின் கையிலிருந்த சூலத்தை எடுத்து, அவள் முன்னிலையில் மித்ரபிந்தன் மார்பில் சூலத்தைப் பாய்ச்சி, அவனைக் கொன்றான். உடனே குணசேகரன் முன் தோன்றிய அம்மன், “இத்துடன் நூறு இளவரசர்கள் பலியாகி விட்டனர். இறுதியாக நூறாவது இளவரசனை பலிகொடுத்த உனக்கு நான் வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ, கேள்!” என்று சொல்ல, மித்ரபிந்தனைத் தவிர அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என வரம் கேட்க, அம்மனும் அவ்வாறே வரம் தந்தாள்.
 
உயிர் பெற்று எழுந்த மற்ற மன்னர்களையும் இளவரசர்களையும் நோக்கி “உங்களுக்கு உயிர் கொடுத்த குணசேகரனை உங்கள் சக்கரவர்த்தியாகக் கருதுங்கள்!” என்று கூறி மறைந்தாள்.
 
கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! குணசேகரனின் செயலைப் பார்த்தால் வியப்பாக இல்லையா? அரசாள்வதில் ஆசையே இல்லை என்று ஆரம்ப முதல் சொல்லி வந்தவன் இறுதியில் எப்படி மாறி விட்டான் பார்த்தாயா? தவிர, மித்ரபிந்தனை சாதாரண மனிதர்களினால் கொல்ல முடியாது என்று அம்மன் கூறியிருக்க, அவனை குணசேகரனால் எவ்வாறு கொல்ல முடிந்தது? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “ராஜ்யம் ஆளும் ஆசையினால் குணசேகரன் மித்ரபிந்தனைக் கொல்லவில்லை. தன் சகோதரனைக் கொன்றவனைப் பழி தீர்க்க எண்ணியே அவன் மித்ரபிந்தனைக் கொன்றான். தன் சகோதரன் மட்டுமன்றி, மற்றும் பல மன்னர்களை அநியாயமாகக் கொன்று பலியிட்ட மித்ரபிந்தனை பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். சாதாரண மனிதர்களினால் மித்ரபிந்தனைக் கொல்ல முடியாது என்று ருத்ரபைரவி கூறியிருந்தது உண்மையே! ஆனால் குணசேகரன் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன் அல்ல! நற்குணங்கள் பொருந்திய உத்தம புருஷன்! ஆகவே, சராசரி மனிதர்களிலிருந்து அப்பாற்பட்ட குணசேகரனால் மித்ரபிந்தனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை!” என்றான்.
 
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

நம்ப முடியாத ரகசியம்.







தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை.உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.
ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான்.
ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான்.

அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது.
அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார்.

அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.

அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.

அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.

அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக?” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.

நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா? அது என்ன?” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.
என்ன?” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும்
குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.

பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!” என்றும் அறிவித்தான்.

 இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா!ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.

அதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.
ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

Saturday, August 3, 2019

விக்கிரமாதித்தன் கதைகள்- கடும் முயற்சி





தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக?உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா?
 கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ஒருமுறை மூவரை சிரமப்படச் செய்தான்.அவன் கதையைக் கூறுகிறேன், கேள்!” என்றது.  
ஒரு கிராமத்தில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று வாலிபர்கள் நண்பர்களாக இருந்தனர். ராமன் கல்வியறிவு உள்ளவன்! பீமன் மல்யுத்தத்தில் கெட்டிக்காரன்.
சோமன் தண்ணீரில் மூழ்கிப் பல வித்தைகளை செய்யக் கூடியவன்! மூவரும் தங்களுடைய பலவித வித்தைகளின் திறமையினால் அந்த கிராமத்து மக்களின் ஆதரவுடன் சொற்ப வருமானம் பெற்றுக் காலம் கழித்தனர். ஒரு சமயம் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அவர்கள் வேலை தேடி ஸ்ரீநகரை அடைந்தனர்.
ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஜமீன்தார் வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு கிருபானந்தா என்ற யோகி வருகை தந்தார். ஜமீன்தாரின் உபசாரங்களினால் திருப்தியடைந்த யோகி “உன் மருமகள் விரைவிலேயே ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்” என்று வாழ்த்தினார். உடனே, ஈஸ்வரனின் மனைவி, “சுவாமி! எங்களுக்குக் குழந்தையே இல்லை. அப்படியிருக்க பேரன் எப்படிப் பிறப்பான்?” என்று கேட்டாள்.

சற்று நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்த யோகி, “அம்மா! அது தெய்வ வாக்கு. நீங்கள் யாராவது ஒரு வயது வந்த வாலிபனை தத்து எடுத்து அவனுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அவனுக்கு விரைவிலேயே குழந்தை பிறக்கும்!” என்றார் யோகி. சரியாக அந்த சமயத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் ஈஸ்வரன் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

ஈஸ்வரன் கதவைத் திறந்ததும், அந்த மூவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, கிருபானந்த யோகி அவர்களைப் பெயரிட்டு அழைத்து அவர்கள் அங்கு வந்திருப்பதன் நோக்கத்தையும் கூறினார்.  

அதை அவர்கள் மூவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்க யோகி தொடர்ந்து, “இந்த ஜமீன்தாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

அவருடைய மனைவி கர்ப்பமாக தசரத மலையில் உள்ள வசிஷ்ட மரத்திலிருந்து பழம் கொண்டு வந்து கொடுங்கள். அதை சாப்பிட்டால் அவள் தாயாவாள்! ஆனால் தசரத மலையைப் பற்றிய ஒரு சிறிய தகவல் மட்டும் என்னால் தரமுடியும். அது மேற்குத் திசையில் இல்லை.

அதனால் மற்ற மூன்று திசைகளிலும் ஆளுக்கு ஒரு திசையாகச் சென்று தேடுங்கள். இரண்டு மாதக்காலத்திற்குள் யார் முதலில் அந்த வசிஷ்டமரத்திலிருந்து பழம் கொண்டு வருகிறானோ, அவனுக்கு ஜமீன்தார் தனது சொத்தில் பாதியையேக் கொடுத்து விடுவார். மூன்று மாதக் காலத்திற்குள் ஒருவராலும் கொண்டு வர முடியவில்லையெனில், மூவரும் திரும்பி வந்து விடுங்கள்.
மூவரில் யார் மிகவும் கடுமையாக முயற்சி செய்தானோ அல்லது கஷ்டமான வேலை செய்தானோ, அவனை ஜமீன்தார் தனது சுவிகாரப் புத்திரனாகத் தத்து எடுத்துக் கொள்வார்” என்றார். அவர்கள் உடனே யோகியை விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். ராமன் வடக்குத் திசையில் சென்றான். போகுமிடமெல்லாம் தசரத மலையைப் பற்றி விசாரித்துக் கொண்டே சென்றான்.

ஆனால் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் கோவிந்தன் என்ற வியாபாரி தனக்கு அந்த மலையைப் பற்றித் தெரியும் என்றான். உடனே ஆவலுடன் ராமன் அவனை விசாரிக்க, அவன், “என் வீட்டில் ஆறு வாரங்கள் எடுபிடி வேலை செய்! நீ நன்றாக வேலை செய்பவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பதாகத் தெரிந்தால், பிறகு நான் அந்த மலையைப் பற்றி விவரம் கூறுவேன்!” என்றான்.

உடனே, ராமன் வியாபாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தான். நன்கு கல்வி கற்றிருந்த அவனை, அந்த வியாபாரி வேலைகளில் ஈடுபடுத்தினான். தனது தகுதியையும், செய்யும் வேலையையும் நினைத்து ராமன் தினமும் மனம் வருந்தினான். இருந்தாலும் தசரத மலையைப் பற்றிய விவரத்தை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான்.

ஆறு வாரங்கள் வேலை செய்து முடித்தப்பின், வியாபாரியிடம் தசரத மலையைப் பற்றி ராமன் கேட்டதும், “நீ உழைப்பாளி என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மாடு போல் உழைத்த உன்னை எப்படி புத்திசாலி என்று கூறுவது? அதனால் உனக்கு சொல்ல மாட்டேன்” என்றான் வியாபாரி.
காலக்கெடுவில் பாதி முடிந்து விட்டதை அலைவதில் பயனில்லை என்று உணர்ந்த அவன் ஸ்ரீநகர் திரும்பத் தீர்மானித்தான். மூவரில் இரண்டாமவன் ஆன பீமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். விசித்திரபுரி என்ற கிராமத்தில் அவன் தன் மல்யுத்தத் திறமையைக் காட்டியபோது, அந்த கிராமத்து ஆட்களில் ஒருவனான சூலபாணி “தம்பி! உன்னைப் போன்ற ஓர் ஆள் நான் பல நாள்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன்.
நான் மலை ஏறுவதில் விருப்பம் உள்ளவன்! அஞ்சனமலை என்று ஒன்று அருகில் உள்ளது. அதன்மீது ஏறிப்பார்க்க எனக்கு ஆசை! ஆனால் உன்னைப் போன்ற ஓர் ஆள் என்னுடன் வந்தால் தைரியமாகச் செல்வேன். யார் கண்டது? நீ தேடும் தசரத மலைகூட அங்கிருக்கலாம்!” என்றான்.
உடனே, பீமன் உற்சாகத்துடன் சூலபாணியோடு கிளம்பினான். அந்த மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பல இடையூறுகளை பீமன் தனது புஜபலத்தினாலும், மல்யுத்தத் திறமையினாலும் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் வெற்றிகரமாக சமாளித்தான். அதற்குள் ஆறு வாரங்கள் ஆகிவிடவே, பீமன் ஸ்ரீநகருக்கு வந்தான். மூன்றாமவன் சோமன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றான்.

செல்லும் இடமெங்கும் தசரத மலையைப் பற்றி விசாரித்தும் அவனுக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருநாள், முல்லையாற்றங்கரையில் அமைந்திருந்த மல்லிகாபுரி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்ட சோமன், ஆற்றில் குதித்து நீச்சலடித்துப் பல வித்தைகளைக் காட்டி அங்கிருந்தவர்களை பிரமிக்க வைத்தான். அங்கு இருந்தவர்களில் மேகநாதன் என்பவன், “தம்பி! முல்லையாறு கடலில் கலக்கும் இடத்தில், கடலில் மகரத்தீவு என்று ஒரு மிக அழகான தீவு உள்ளது.

அங்கு செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை! ஆனால் சங்கமப் பிரதேசத்தில் ஏராளமான முதலைகள் இருப்பதால், யாரும் என்னுடன் வரத்தயாராக இல்லை. நீ வருகிறாயா? ஒருக்கால், மகரத்தீவின் அருகிலே நீ தேடும் தசரத மலை இருக்கலாம்!” என்றான். அது கேட்ட சோமன் உற்சாகத்துடன் மேகநாதனோடுப் புறப்பட்டான்.

இரண்டு நாள்கள் முல்லையாற்றில் மேகநாதனுடன் படகில் பயணம் செய்த பிறகு, ஆறு கடலில் சேருமிடம் வந்தது. திடீரென ஏராளமான முதலைகள் அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டுத் தாக்க ஆரம்பித்தன. சோமன் அத்தனை முதலைகளையும் படகோட்டும் துடுப்பினால் அடித்துப் படுகாயப் படுத்தினான். முதலைகள் இடமிருந்துத் தப்பி, இருவரும் மகரத்தீவை அடைந்தனர்.
அந்தத்தீவில் வாழ்ந்தப் பழங்குடியினர் இருவரையும் சிறைப் பிடித்துத் தங்கள் தலைவன் முன் நிறுத்தினர். பழங்குடியினத்தினரின் தலைவன் அவர்கள் இருவரையும் நோக்கி, “மகர தேவி எங்கள் குலதேவதை! அவளுக்கு நாங்கள் நரபலி கொடுப்பது வழக்கம்! உங்களைப் போல் பயணிகளைத்தான் நாங்கள் பிடித்து வந்து பலியிடுவோம்! இங்கு ஒரு முதலைக்குளம் உள்ளது. உங்கள் இருவரையும் அதில் வீசி எறிவோம்! மகரதேவி முதலையின் உருவில் வந்து உங்களைக் கடித்து உண்ணுவாள்!” என்றான்.

அதைக்கேட்டு, இருவருக்கும் இதயமே நின்று விடும் போலிருந்தது. ஆனால் சற்று நேரத்தில் சமாளித்துக் கொண்ட சோமன், “தலைவா! முதலில் என்னைக் குளத்தில் அனுப்பு! அங்குள்ள முதலைகளிடமிருந்து நான் தப்பி விட்டால், எங்களை எங்களை விட்டுவிடு!” என்றான். அதற்குத் தலைவனும் சம்மதித்தான்.

உடனே, சோமன் முதலைக் குளத்தில் வீசி எறியப் பட்டான். அங்கு பல முதலைகள் அவனைக் கடித்துத் தின்ன முயன்றும், சோமன் அவற்றுக்கு மிக சாமர்த்தியமாகப் போக்குக் காட்டி மின்னலென நீந்திக் கரைக்கு வந்துவிட்டான். தலைவனும் மகரதேவி அவர்களை பலியாக விரும்பவில்லை என்று நம்பி விட்டுவிட, இருவரும் மல்லிகாபுரி திரும்பினர். அங்கிருந்து சோமன் ஸ்ரீநகர் திரும்பினான்.

ஆக, தசரத மலையைக் கண்டு பிடிக்க முடியாமல், மூவரும் ஸ்ரீநகர் திரும்பினர். நடந்ததை எல்லாம் கேட்ட பின்னர் யோகி, “முன்னமே நான் சொன்னபடி, தசரத மலையைக் கண்டு பிடிக்க மிகக் கடுமையாக முயற்சிசெய்தவனை, ஜமீன்தார் தத்து எடுத்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தேன்.

அதன்படி, உங்களில் ராமன்தான் மிகவும் கஷ்டப்பட்டவன்! ஆகவே, அவனையே தத்து எடுத்துக் கொள்ள ஜமீன்தார் சிபாரிசு செய்கிறேன்!” என்றார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! தசரத மலையைக் கண்டு பிடிக்க பீமனும், சோமனும் தான் மிகக் கடினமாகப் பாடுபட்டார்கள். உயிருக்கே அபாயம் விளைவிக்கக் கூடிய சாதனைகளைப் புரிந்தார்கள். அப்படியிருக்க, கேவலம் எடுபிடி வேலை செய்த ராமனைப் போய் எவ்வாறு யோகி தேர்ந்தெடுத்தார்? என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.

அதற்கு விக்கிரமன், “பீமன், சோமன் இருவரும் உண்மையாகவே பாடுபட்டார்கள் என்றாலும், அவர்கள் செய்தது அவர்களுடைய திறமைக்குப் பொருத்தமான செயல்களே! அபாயகரமான சாதனைகளை அவர்கள் உற்சாகத்துடன் செய்தார்கள். ஒருவன் தனது மனத்திற்குப் பிடித்த வேலையை செய்யும்போது சிரமம் தெரிவதில்லை.

ஆனால் ராமனின் நிலை வேறு! நன்கு படித்திருந்த அவனை ஒரு கொத்தடிமை போல் ஈனமான வேலைகளைச் செய்யச் சொன்னான் அந்த வியாபாரி! அவனுடைய மனத்திற்குப் பிடிக்காத, வேலையை அவனுக்கு செய்ய நேரிட்டது. எதனால்? தசரத மலையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால்தான்! மூவரின் நோக்கம் ஒன்றானாலும், அவர்களுக்கு செய்ய நேரிட்ட முயற்சிகள் வேறுபட்டவை!

ஆகவே, மூவரில் ராமன்தான் அதிக சிரமப்பட்டான் என்று யோகி தேர்வு செய்தது சரியே!” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

விக்கிரமாதித்தன் கதைகள் -சாப விமோசனம்







தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!” என்று சொல்லிவிட்டுக் கதை சொல்ல தொடங்கியது.
திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப் பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்
கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், “கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும்.

 நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!” என்றான்.

சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!” என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.
பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, “நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள்.

அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், “என் பெற்றோரிடம் இதைக் கொடு!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.

பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர்.  

திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், “என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!” என்றான்.

கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, “நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!” என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, “நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு கௌசிகன், “உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!” என்றான். “ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!” என்றான்
அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!” என்று கௌசிகன் சொல்ல, “எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்” என்றான்.சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், “அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!” என்று கூறிவிட்டுச் சென்றான்
பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள்.
ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார்.
ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, “நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!” என்று ஆசை காட்டினார்.
அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.

விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து “அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது” என்றார்.

உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, “நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?” என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.

உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, “உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!” என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார். இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள்.

 இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?
அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.

அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.

ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி” என்றான்

விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

விக்ரமாதித்தன் -கதைகள் -வீரபாகு




முன்னோட்டம் படித்திருப்பீர்கள் ....கதைகளில் ஒன்று.


தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.

தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர்.ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, “மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், “முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது” என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.

அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து “நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!” என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.

உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்.“ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். அதற்கு நீலிமா, “திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை” என்றாள்.
இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!” என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். “முடியவே முடியாது!” என்று நீலிமா கூச்சலிட, “நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!” என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.

ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், “வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!” என்றான்.
நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். “உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!” என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.

அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர்.

கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது.

கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான்.

அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், “நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்!
இந்த வாய்ப்பை நழுவ விடாதே!” விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான்.

பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, “பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!” என்றார்.

உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, “என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்” என்றாள்

அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, “இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன்.கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்” என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம்.
தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான்.
அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது.

அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள்.

அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினால் , வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள்.

ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.