Wednesday, July 10, 2019

பழ மொழியும் விளக்கங்களும் ...



1.  பட்டும் பாழ், நட்டும் சாவி .

     இது விவசாய்களின் மத்தியில் கிராமங்களில் புழங்கும் பழமொழி...
விவசாயத்தில் இழப்பு ஏற்படும் போது கூறப்படுவது .

 பட்டும் பாழ்- பாடு பட்டது (உழைத்தது ) எல்லாம் வீண்
 நட்டும் சாவி - நட்ட பயிர்கள் எல்லாம் விளையாமல்  பதர்கள் ஆகுவது. (சாவி என்பது முற்றாத நெற்க் கதிர்களை குறிக்கும்.)

கடுமையாக உழைத்தும் நம்மால் சில நேரங்களில் வெற்றி பெற முடியாமல் ..போவதை குறிக்கும் பழ மொழி ..

2. கொடுக்கிறது உழக்குப்பால் , உதைக்கிறது பல்லு போக.

     இதுவும் கிராமத்து பழ மொழி தான்...வீடுகளில் வளருக்கும் பசு / எருமை  மாடுகளில் பால் கறப்பது பெரிய விஷியமாக இருக்கும் ...காரணம் பால் கறக்கும் போது மாடுகள் உதைக்கும்...உதைத்தாலும் நாம் விட்டு விடுவோமா....குறைந்த பாலாக இருந்தாலும் உதை பட்டாவது ...கறந்து விட மாட்டோமா ... அதற்குத் தான் இந்த  பழமொழி ...

   சில நேரங்களில் நம் வாழ்க்கையில் இப்படித்  தான்... சிறிய  பலனிற்காக ....நிறைய துன்பங்களை அனுபவிப்பது....

3. கை காய்த்தால் கமுகு (பாக்கு ) காய்க்கும்.

     இதுவும் கிராமத்து பழ மொழி தான்....பாக்கு (மரம்) பயிரிட்டால் அதை நன்கு பராமரிக்க வேண்டும்...கைக்கு தான் அதிக வேலை...கை காய்த்துவிடும் என்பார்கள்..
வேலை.. செய்து செய்து கைகள் கருப்பாக (வேலை செய்ததின் அடையாளம் ) இருக்கும்.ஆனால் பாக்கு நன்கு காய்த்து பலன் கொடுக்கும்..

    கடின உழைப்புக்கு என்றும் நல்ல பலன் தான் கிடைக்கும் ...

4.  மேய்த்தால் கழுதை  மேய்ப்பேன் , இல்லாது  போனால் பரதேசம் போவேன் . 

       மேய்ப்பது என்றால் .. ஆடு ..மாடு ..இவற்றைத் தான் குறிக்கும் ..மிஞ்சி போனால் வாத்து..கோழி ..இவற்றைஎல்லாம் கூட சொல்லிக்கொள்ளலாம் ...கழுதையை பற்றி கேள்வி பற்றிருக்கிறோமா....அந்த வேலை கிடைக்காவிட்டால் ..வேறு ஊருக்கு சென்று விடுவேன்
(சுற்றி திரிவேன்) என்று கூறுவது அபத்தம் அல்லவா ...

  இப்படித்தான்..சிலர் நம்மில் இருக்கிறார்கள் ..எத்தனையோ முக்கியமான , தேவையான  விஷியங்கள் ..இருந்தாலும் தேவையில்லாத செயல்களை செய்வார்கள்...
இதற்குத்தான் இந்த பழ மொழி...

5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம்  பார்க்கிறதா?
   
     மனிதனின் உருவ அழகை நிர்ணயிப்பதில் முடியின் பங்கும் முக்கியம். முடியுள்ள தலைக்கும், முடியில்லா தலைக்கும் நிறைய வேறுபாடு  இருக்கிறது...தலையில் பார்த்துயிருப்பீர்கள் ....சுழி ஒன்றோ அல்லது இரண்டோ ..இருக்கும் ..
    முடி இருந்தால் போதும்.. எனும் போது  தலையில் உள்ள சுழி, முடி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு அல்லவா..

 மனிதர்கள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.உதவி பெரும் நிலையில் உள்ளவர்கள் ..உதவியை பெற்றவுடன் , இப்படி உதவிருக்கலாம்.. அப்படி உதவிருக்கலாம் என்று
நினைப்பது ..

6. பார்க்கக்   கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

   ஒரு  பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி செயல் படுவது ... வெள்ளிக்கிழமை என்றால் ஒரு சிலர் பணம், பொருள் எதையும் தரமாட்டார்கள். செலவும் செய்ய மாட்டார்கள். இது அவரவர் நம்பிக்கை விஷயம். எண்ணிப் பார்த்து சொல் என்று ஒருவர் கொடுத்த பணத்தை .."இன்று வெள்ளிக்கிழமை ...தரமாட்டேன்.." என்று சொல்வது அபத்தம் அல்லவா..

    சில  மனிதர்களின் நம்பகத்தன்மையும் இப்படித்தான்....

7. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் , அதுவும் ஒரு வரிசை என்பான்.

     கரடி என்ற சொல்லின் திரிபு தான் கெரடி . கரடி என்றால் சிலம்பம் என்று பொருள்.
வரிசை என்றால்  முறை,ஒழுங்கு, வகை என்று பொருள். சிலம்பம் கற்றவன் ஆடும் போது இடறி விழுந்தாலும் , அதைத்  தவறாக ஒப்புக்கொள்ளாமல் அதையும் ஒரு வகை என்று கூறுவது தான் இதன் பொருள் .

 மனிதர்கள் எத்தனையோ பேர் ...இப்படித்தான் இருக்கிறார்கள்.தவறி செய்யும் தப்பை  ஒப்புக்கொள்வதில்லை..

8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையில் விட்டால் தண்ணீர்.

    ஏற்றத் தாழ்வு ....நிறைவு....குறைவு ... இதை உணர்த்துவது தான் இந்த பழ மொழி ...
நீர் ஒன்று தான்..இது  சங்கிலே இருக்கும் போது தீர்த்தம்...மண்ணாலான மொந்தையில் இருக்கும் போது வெறும் நீர் தான் ...

   சமூகத்தில் உயர்வான மற்றும் சாதாரண இடத்தில் இருப்பவர்கள்  சொல்லும், செயலும் ஒரே மாதிரி உணவரப்படுவதில்லை..

9. வாழைப் பழம் கொண்டு  போனவள் வாசலில் இருந்தாள் , வாயைக் கொண்டுபோனவள் நாடு வீட்டில் இருந்தாள் .


  'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் '.  மேல சொல்லப்பட்ட பழ மொழியின் சுருக்கம் இது தான். பிற இல்லங்களுக்கு செல்லும் போது பழங்கள் வாங்கிச் செல்வது ஒரு மரபு.மரபை கடைபிடிப்பவர்கள் பலராக இருந்தாலும், ஒரு சிலர் இவர்களை பின்னுக்குத்   தள்ளி, வாய் ஜாலத்தினால், மிகுந்த முக்கியமானவர்கள் போல வீட்டின் உள்ளே அமர்ந்திருப்பார்கள். சிலர் பேர் பேசியே வசியம் செய்து விடுவார்கள்..
       இன்றைய சமுதாயத்தில் ..இவர்கள் ஏராளம்...

10. நேற்று வெட்டின கிணற்றிலே , முந்தாநாள் வந்த முதலை போல .

     நேற்று வெட்டின கிணற்றிலே,முந்தா நாளே முதலை வருவதற்கு சாத்தியம் இருக்கிறதா ?
 சாத்தியம் இல்லாத ஒன்றை ...சாத்தியம் என்று சொல்லும் மனிதர்கள் இன்று ஏராளம்...ஏமாந்து போகும் மனிதர்களும் அதிகம்...பிரித்து அறியவே இம்மொழி ....



Tuesday, July 2, 2019

எங்கே?.......எங்கே?.....எங்கே?....பித்து பிடித்து கேட்பவரின் ... கேள்விகள் ...படித்ததில் பிடித்தது....






பனையோலை விசிறி
எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மொரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல்துலக்க ஆலங்குச்சி
எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம்பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள்
எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி
எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?



அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்கள் எங்கே ?

தாய்ப்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள்பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பை
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீர்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழுஆயுள் நமக்கு
எங்கே?

*"சிந்திக்க நமக்கு"*
*"நேரம்தான்எங்கே?"*
*எங்கே???"*

*"இத்தனையும் தொலைத்துவிட்டு"*
 *"நாம் செல்கின்றஅவசரப்பயணம் தான்"* *எங்கே?"*


முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
மீட்க முடியாது...!

அத்தி வரதர் ....



40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்'  ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்... இது ஒரு செய்தி தான்.. வரலாறு தெரிய வேண்டாமா .... இதோ சில குறிப்புகள் ...

வரதராஜப் பெருமாளை உருவமாக கண்டு பிரம்மித்த பிரம்மன், அதே உருவத்தை அத்தி மரத்தில் உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாத நாளே இல்லை. அந்த மன சந்தோஷத்தின் பால் மீண்டும் சத்திய விரத க்ஷேத்திரம்(காஞ்சிபுரம்) வந்தார் பிரம்மன். அத்தி வரதர் முன் தன் மனநிறைவின் காரணமாக யாகம் ஒன்றை செய்தார்.அந்த யாகத்தில் உருவான தீச்சுடர், அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுவிட்டது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. 'வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் உன் திருமேனி இப்படி ஆகிவிட்டதே!' என்று வருந்தினார்.


அப்போது பிரம்மாவிடம் அத்தி வரதர், 'பிரம்மா! திருமேனியில் (பின்னப்பட்டு) குறைவு கொண்டு விக்கிரஹமாக இவ்விடம் நின்றருள்வது நன்றன்று. மேலும் யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக் கொள்ள கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள அனந்தஸரஸ் என்னும் பொய்கைக்குள் இருக்கும் நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னை வைத்துவிடு. அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறுகிறேன்!' என்று கூறினார்.

அத்தி வரதரின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப்பேழையில் வைத்து, அனந்த சரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். அத்தி வரதர் அவ்விடம் வாசம் கொள்வதால் எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றியதே இல்லை.

வரதராஜப் பெருமாள் கோயில் இப்போது இருக்குமிடம் முன்னர் அத்திமரங்கள் சூழ்ந்த யானை வடிவான மலையாக இருந்தது. இதனால் அத்தி மரங்கள் சூழ்ந்த மலை(கிரி) என்பதால் இத்தலம் அத்திகிரி என்றழைக்கப்பட்டது. இதன் காரணமாக இவ்விடம் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு அத்திகிரி வரதராஜர் என்ற நாமம் உருவானது. அதுவே அத்தி வரதர் என சுருங்கலாயிற்று.

இவ்வாறு அனந்த சரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்தி வரதர், 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார். 48 நாட்களுக்குப் பின் மீண்டும் அனந்த சரஸ் பொய்கைக்குள்ளே சென்றுவிடுவார்.


முன்பு அறுபது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி அளித்த அத்தி வரதர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி தருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அதாவது 2.7.1979லும் அதற்கு முன்பு 12.7.1939-ஆம் ஆண்டிலும் அதற்கும் முன்பு 13.6.1899-லிலும், 18.8.1859-லிலும் அத்தி வரதரை நீரிலிருந்து வெளியே எழுந்தருளச் செய்து, பொதுமக்களின் தரிசனத்திற்காக 48 நாட்கள் விசேஷ பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் தண்ணீருக்குள்ளேயே திரும்ப எழுந்தருளச் செய்யப்பட்டார்.

தற்போது ஜூலை 1, 2019ல் காட்சி கொடுக்க உள்ளார். 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார்.

நாரணனன் நாமம் வாழ்க ......

மனதின் நடுநிலைமை ..எனும் ..நிகழ்காலம் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்கிளின் வார்த்தைகள் ...சில வரிகள்...





மனம் இடதாகவும் இல்லை, வலதாகவும் இல்லை. அது நடுநிலையில் இருந்தது. நிகழ்காலத்தில் மனம் இருப்பதே நடுநிலையில் இருப்பது.

நடுநிலையில் மனம் இருந்தால்தான், தன்னை புரிந்து கொள்வதும், தனக்கு எதிரே இருப்பதை புரிந்து கொள்வதும் எளிதாக முடியும்.

லாபம் கருதிய எதிர்காலத்திலும், கோபமுள்ள கடந்த காலத்திலும் மனம் இருக்குமாயின் எதிரே இருப்பவரைப் பற்றிய அபிப்ராயங்கள் குளறுபடியாகத்தான் இருக்கும்.

ஏன் எதிரே இருப்பவர் பற்றிய அபிப்ராயம் முக்கியம்? வாழ்க்கை தொடர்புடையது. "லைஃப் இஸ் ரிலேஷன்ஷிப்." எல்லோரோடும், எப்பொழுதும் தொடர்பு கொள்வதுதான் வாழ்க்கை.

இந்த தொடர்பு கொள்ளுதல்தான் வாழ்க்கை எனில் எதிராளியைப் பற்றிய முழுமையான அறிவு ஒருவருக்கு வேண்டும். அந்த அறிவு நடுநிலையில் இருக்கும்போதுதான் மிகச் சரியாக இருக்கின்றது.

அவரை பற்றிய கடந்தகால செய்தியோ, அவரால் அடையக்கூடிய லாபம் பற்றிய எதிர்கால செய்தியோ நமக்குள் வருமாயின் அவரோடு தொடர்பு கொள்ளுதல் தவறாக போகும். தொடர்புகள் தப்பு தப்பாக இருக்கும்.

இப்படி இருப்பதற்கு பதில் தொடர்பற்று இருப்பதே உத்தமம். ஆனால் தொடர்பு கொள்ளத்தான் வேண்டும். தொடர்பு கொள்வதுதான் வாழ்க்கை. தொடர்பில்லாமல் இருக்க முடியாது.

மரணபரியந்தம் வரையில் ஒரு மனிதன் தன் சக மனிதனோடு, தாவரத்தோடு மற்றும் விலங்குகளோடு, உயிரினங்களோடு தொடர்பு கொள்ளத்தான் வேண்டும். நிர்ப்பந்தம். புவி வாழ்க்கையின் விதி.

எனவே நிகழ்காலத்தில் இருப்பது அதாவது நடுநிலையில் இருப்பது என்பது மிகப்பெரிய அமைதியின் பாற்பட்டு தான் வரும். மனம் ஓயாது கூவிக் கொண்டிருப்பதை நிறுத்த உள்ளுக்குள்ளே தன் பார்வையை திருப்ப வேண்டும்.

உள்ளுக்குள்ளே தன் பார்வையை திருப்ப ஒரு அமைதி வேண்டும். அந்த அமைதியையும், தன்னை தான் பார்க்கின்ற பார்வையையும் அப்படி பார்த்து கனிந்த குருவால்தான் கொடுக்க முடியும்.

இது சொல்லி தெரிவதல்ல. இது வகுப்பறை பாடமல்ல. இதற்கு புத்தகங்கள் கிடையாது. ஒரு குரு தனக்குள் மூழ்கி, தன்னுள் கெட்டிப்பட்டு நிற்கின்ற ஒரு முனிவர், மகாமனிதன், மகாத்மா.

தன் எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற, இதே விஷயத்தை வேண்டுகின்ற மனிதனுக்கு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் வாரி வழங்குகிறார்.

மிக அற்புதமாக அவருக்குள் இருந்த அந்த கருணை அன்பு எதிரே இருப்பவர் மீது பொழிந்து மனதை ஒருமைப்படுத்தி உள்ளுக்குள்ளேயே போக வைக்கிறது.

மனதை ஒருமைப்படுத்தி உள்ளே போய் கெட்டிப்பட்ட நண்பரால் மனிதரால் எதிரே இருப்பவரை அவ்விதமே மாற்ற முடியும்.



அனுபவமே குரு..... சூப்பர் கதை ஒன்று... படித்ததில் பிடித்தது.....








ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.
இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி,
ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார்.

‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்....
‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது.

*நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம*


பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!
‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

*நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.*

*நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன*

*ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத்  தெரியும்??