Saturday, March 10, 2018

கோலம் 



கோலம் 
தமிழரின் வாழ்வில் பின்னி பிணைந்த வார்த்தை கோலம் . நம் கலாச்சாரத்தின்  மிக அழகான  விஷயம் கோலம். இல்லங்களின் முகப்பில் அலங்கரிக்கும் கோலங்கள் உள்ளங்களை வசீகரிக்கும்  என்பது மட்டுமல்ல, நம் கலாச்சாரத்தின் அழகும் கூட. நம்  கோவில்களின் பிரகாரங்களில் மட்டுமல்ல, சுவர்கள் மற்றும் மேல்  விதானங்களில்  தீட்டபட்டிருக்கும் கோலங்கள் கோவில்களின்  அழகை மேலும் மெருகேற்றி  வருகிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.
தொன்மை காலம் தொட்டே நம் வாழ்க்கை நிழ்வுகளோடு வந்து கொண்டிருப்பது கோலங்கள். 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோலம் என்கிறார்கள் மானுடவியல் ஆய்வாளர்கள். மிகப் பபழைமையான திராவிட கலாச்சாரத்தின் பின்னணி கொண்டது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒரு அங்கமாகவே இருக்கிறது. தர்மம் என்பது எல்லா உயிரனங்களுக்கும் சேவை செய்வது . அரிசி மாவினால் கோலமிடுவதன் மூலம் எரும்புகள், பறவை இனங்கள் இவைகளுக்கு உணவிடுப் படுவதாக நினைத்தார்கள் நம் முன்னோர்கள் .பூமித் தாய்க்கு சமர்ப்பனகாவும் எண்ணினார்கள்.

    படங்களோ, சிலைகளோ வீட்டுப் புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தை திருநிலை கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமே இருந்தது. குத்துவிளக்கும் மனைப்பலகை அல்லது மன்னால் செய்த சிறு பீடம் அல்லது கோலத்தின் மீது தான் வைக்கப்பட்டது .

   கோலம் இடப்பட்ட இடங்களை சங்க இலக்கியங்கள் 'களம் ' என குறிப்பிடப்படுகின்றன . இத்தகைய "களங்கள் " அக்காலத்தில் பூசாரி  வெறியாடும் களமாக அமைந்தன.  " களமெழுத்து" என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில்  வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றன. " சர்ப்பந்துள்ளல் ' போன்ற வழிப்பாட்டு நடனங்கள் பல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்படுகின்றன .

    இலக்கிங்கள் குறிப்பிடும் ' களன்  இழைத்தல் " என்ற சொல் தமிழ் நாட்டில் இன்றுமறைந்து விட்டது . அதற்கு மாற்றாகவே அழகு படுத்துதல் , ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் பழக்கத்தில் வந்துள்ளது. தலைவாசல் கோலம் என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம் மண்ணில் கால் பதிப்பதிற்கு இடப்பட்ட முதல் கோலமாகும் . வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தை  திருநிலைப்படுத்த இடப்பட்டதாகும்.

      வியாசர் எழுதியாகக் கருதப்படும் 'வராக புராணத்தில் ' வாசல் தெளித்து கொள்மிடுவதைப் பற்றிக்  கூறி இருக்கிறார். பகலவன் (சூரியன்) எழு முன்னே வாசலைப் பெருக்கி பசுன்சான  நீரால் தெளித்து கொலமிடுவதன் மூலம் இந்தப் பிறவியின் துன்பத்தை நீக்கலாம் என்கிறார் வியாசர். வைகுண்டத்தில் திருமகளும் கொலமிடுவதாக வியாசர் தன வராக புராணத்தில் குறிப்பிடுகின்றார்.  

   கோலம் பலவகைப்படும் . பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக்கோலம், பாம்புக் கோலம், மனைக் கோலம், கம்பிக் கோலம், தந்த்ரிக் கோலம், புள்ளிக் கோலம் என பலவகைப் படும்.

     காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உடலின் ரத ஓட்டத்தை சிராக்கும் . மேலும் இது ஒரு யோகாசனமும் கூடஇடுப்பை வளைத்து , கால்களை நேராக்கி, தலையை குனிந்து கோலமிடுதல் ஒரு யோகாசனம் ஆகும். மேலும் கோலமிடும் போது கண்கள் புள்ளிகளை கூர்ந்து கவனிப்பதால் பார்வையும் கூர்மையாகிறது. கற்பனை வளம், கணிதத் திறமையும் வளரும்.

       கோலத்தோடு தொடர்புடைய பல சுவையான செய்திகளும் உள்ளன. செட்டி நாட்டு பகுதிகளில் நடைபெறும் திருமணங்களில் உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடுகின்ற நாளன திருமணத்திற்கு முதல் நாள் வீட்டுத் தலைவாசலில் ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்று கூடி 'நடு வீட்டுக் கோலம்' என்று ஒரு கோலமிடுவது வழக்கம். அதன் மீது பெண், மாப்பிள்ளையை நிற்க வைத்து ஆர்த்தி எடுப்பார்.

    தும்பு பிடிப்பது என்று நேர்கோடாக ஒரு கோலம் இடுவார்கள். வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்தக் கோலம் விளக்குறது.
திருமண வீட்டில் இடும் நாடு வீட்டுக் கோலத்தைச் சுற்றி தவறாமல் புள்ளி வைக்க வேண்டும். புள்ளிகள் குழந்தை செல்வத்தை  குறிப்பதாகும். திருமணத்திற்கு பிறகு குளம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே புள்ளிகள் இடப்படுகின்றன. வாழ்க்கை கோபுரம் போல உயர வேண்டும் என்பதற்காகத் தான் நான்கு கோடுகளை ஒரு சதுரமாக இணைக்கிறார்கள்.

     கோலம் என்றால் 'அழகு ' என்று பொருள். வீட்டை அழகுபடுத்தினால் மகிழ்ச்சி குடியேரும். மனதை அழகுபடுத்தினால் இறைவன் குடியேறுவான்.
     ஒவ்வொரு விழாக்களையும் கொண்டாடும் போது, அதற்குரிய சிறப்பான கோலங்களும் உள்ளன. தீபாவளி, கார்த்திகை, பொங்கல், கிருஷ்ணா ஜெயந்தி என ஒவ்வொரு பண்டிகைக்கும் கோலங்கள் உள்ளன. கிருஷ்ணா ஜெயந்திஅன்று குழந்தையின் பாதங்கள் வெளியில் இருந்து உள்ளே வருவது போல மாக்கோலம் இடுவது அப்பன்டிகையின் மிகச் சிறப்பான விஷயம் ஆகும். துளசி மாடகோலம்,நவக்கிரககக் கோலம், கலசபூஜைக்கோலம், கணபதி ஹோமம் கோலம்.. இவையல்லாம் நம் விழாக்களோடு தொடர்புடையக்  கோலங்கள்.

    வீதிகளில் சுவாமி திருவீதி உலா வரும் போது, சுவாமியை வரவேற்க இல்லங்களில் (வீட்டின் முன்) முன் வாசலில் கோலமிட்டு வரவேற்பது இன்றும் நடை முறையில் உள்ள செய்தி. குல தெய்வம் சன்னதியில் மாகோலம் இட்டு, அதன் மீது மா விளக்கு ஏற்றி வைத்து வழி பட்டால் போர்க் கோலம் மாறும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கோலம் இடுவதற்கான சில இதி முறைகளும் சுவையாகவே உள்ளன .


  •    சூரியன் உதிக்கும் முன்பே பசும்சானம் தெளித்து, கோலமிட வேண்டும்மாலையில் சூரியன் மறையும் முன்பே நீர் தெளித்து கோலமிடவேண்டும் .
  • தெற்கு பார்த்தோ, முடியும் படியோ இடக் கூடாது.
  • கோலம் போட்டு செம்மண் (காவி) இடுவது மும் மூர்த்திகளை குறிப்பது ஆக  கூறப்படுகிறது.
  • பசும் சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், வெண்மை பிரம்மாவையும், காவி சிவனையும் குறிக்கிறது.
  • கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் பெருகும்.
  • திங்கள்- அல்லி கோலம் , வியாழன்- துளசி மாட கோலம் , வெள்ளி - எட்டு இதழ் தாமரைக்கோலம்,சனி - பவளமல்லி கோலம் , பவுர்ணமி- தாமரைகோலம்  இட்டால் விசேஷம்
  • வீடு சுவரை ஒட்டி போடும் கரை (பார்டர்) கோலங்கள் தீய சக்தியை உள்ளே விடாது என்பது நம்பிக்கை.
  • இடது கையால் கொலமிடக்கூடாது : உட்கார்ந்து கோலமிடக்கூடது.
  • கணவர் வெளியில் செல்வதுற்கு முன்பே கோலம் போட வேண்டும்.
   
           கோலத்தை பற்றியும், அதன் வரலாற்றைப் பற்றியும் "சத்குரு'' அவர்கள் சில சுவையான செய்திகளை கூறி இருக்கிறார். மார்கழி மாதத்தில் மட்டும் கோலம் ஏன் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது? இதற்குரிய சில விளக்கங்களையும் "சத்குரு'' அவர்கள் கூறியிருக்கிறார். செய்திகளின் சாரம் இதோ ....
           கோலம் என்பது அலங்காரதிர்காகப் போடப்போடுவதல்ல... இது ஓர் விதமான் வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம் தான். அடிப்படியான வடிவம் முக்கோண வடிவம் ஆகம். இதை எந்திரம் என்றும் சொல்லலாம். சரியான முறையில் உருவங்கள் இணைந்தால் அது எந்திரம்.
             இந்த பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான பிரம்மாண்டமான எந்திரமாக  இருக்கிறது. நம் உடல் கூட ஒரு யந்திரம் தான். இந்த உடல் என்னும் எந்திரத்தை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும் பூமியின் சக்தி சூழ்நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணரமுடியும்.நமது கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்தரமாகத்  தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர்.
            புத்த மடாலயங்களில் ஒரு கோலத்தை பத்து  பேர் காலையிலிருந்து மாலை வரை போடுவார்கள். தொடர்ந்து 3,4 மாதங்கள் வரை அந்தக் கோலத்தை வரைவார்கள். ஒரு கோலம் வடிவத்தைப் பொருத்தும் அதில் பயன்படுத்தும்  பொருட்களைப் பொருத்தும் வெவ்வேறு விதங்களில் செயல்படும். தாந்திரீக முறைப்படி பூஜை செய்யும் போது பெரிய கோலங்கள் இடப்படும். கேரளாவில் இதனை நாம் பார்க்க முடியும்.பல விதமான பலன்களுக்கு பல விதமான கோலங்களைப் போடமுடியும். அதில் ஒன்று மாட்டு சாணம் தெளித்து அதன் மேல் கோலம் இடுவது , அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி இருக்கிறது.

        வருடம் முழுவதும் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தின் கோலங்களை மறக்க முடியுமா ? மார்கழி மாதத்தில் கோலங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

       மார்கழி மாதத்தில் தான் சூரியன் தக்ஷ்னயனதிலிருந்து (தெற்கிலிருந்து) உத்தராயனத்திற்கு (வடக்கிற்கு)நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே மாதம் வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான். சூரியன் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும் பொது பூமியனுடைய சக்தி, சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

        மகாபாரதத்தில் , பீஷ்மர் தன உடலில் அத்துணை அம்புகள் தைத்திருந்த போதும், தன் உயிரை உத்திராயனத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடமால் பிடித்து வைத்திருப்பார். உத்திராயனத்தில்உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
         உத்திராயணம் தொடங்கும் பொது பூமியில் குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழ்நாடு , ஆந்திரா , கர்நாடாக போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில் தான் உள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்கின்ற போது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன.யோகா முறையிலும் பல விதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டன. குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்த சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். மார்கழி முதல் கோலத் திருவிழா தையில் பொங்கல் முடியும் வரை தொடர்கிறது.

          ஜப்பானில், புள்ளிக் கோலங்களை முறைபடுத்தி அந்நாட்டு கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.
    தொன்மை தெனிந்தியாவில் பெரிய அளவில் பேசப்படும் கோலங்கள் இடத்திற்கேற்ப வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கோலம், ஆந்திராவில் முக்குலு, கர்நாடகாவில் ஹசே , ரங்கோலி, மகாராஷ்ட்ராவில் ரங்கோலி, கேரளாவில் கோலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல இந்தோனோஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசியா நாடுகளிலும் கோலமிடும் வழக்கம் பரவியிருக்கிறது.

     இப்போது அரிசி மாவினால் கோலமிடு வழக்கம் குறைந்திருந்தாலும், மலிவாக கிடைக்கக் கூடிய சாக் பௌடர், வெள்ளை கற்களால் பொடியக்கப்பட்ட மாவினால் கோலங்களை இடுகின்றனர்.

     தினசரி கோலங்கள், பண்டிகைக் கோலங்கள், விழாக்கால  கோலங்கள், நவக்கிரக கோலங்கள் என்று கோலங்களை வகைப்படுத்தினாலும் கோலங்களில் பல வகைகளில் வகைப்படுத்தி பார்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

     கம்பி கோலங்கள் , இழைக் கோலங்கள், வண்ணக்கோலங்கள், படிக்கொலங்கள், மாகோலங்கள், நீர் கோலங்கள் , புள்ளி இல்லா கோலங்கள் என்று பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகிறது கோலங்கள்.

      புள்ளி இட்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து அனைத்து புள்ளிகளையும் இழைகளால் இணைக்கும் இவ்வகைகக் கோலங்களை கம்பி கோலங்கள் அல்லது சிக்குக் கோலங்கள் என்றழைக்கப்படுகிறது.(இடையில் தவறு நேர்ந்தால் சரி செய்வது சற்றுக் கடினமே.

   புள்ளி வைத்து பூக்கள் (அல்லது) வடிவங்கள் வரைந்து அதில் வண்ணங்களை சேர்த்து அழகு பார்ப்பது பூக்கோலங்கள் அல்லது வண்ணக் கோலங்கள் எனலாம்.
   படிப் படியாய் வடிவம் இட்டு , ஓரங்களில் செம்மண் கரையிட்டு பண்டிகைக் களங்களில் இடுவது படிகொலங்கள்.
    பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் உறவைத்து, பின் அரைத்து  அடர்த்தியாக நீரில் கரைத்து, சிறிய துணி அல்லது பிரஷால் தொட்டு கோலங்கள் இடுவது மாக்கோலம் ஆகும்இக்கோலங்கள் கலையாமல் ஒரு வாரம் கூட இருக்கும்.சிலர் அரிசி மாவு கரைசலில் மைதா மாவு அல்லது உளுந்து மாவு கலப்பது உண்டு. இழை இழையாய் கோலமிட்டு, ஓரங்களில் செம்மண் இடுவது காண வெகு அழகாய் இருக்கும்.

    தட்டுகளில் அழகாய் கோலம் இட்டு (அழியாத கோலம்) அதன் மேல் நீர் உற்றி இடுவது நீர் கோலங்கள். இக் கோலங்கள் வெகு சிலரே குடும்ப விழாக்களில் இடுகின்றனர்.

   புள்ளி இல்லா கோலங்கள் (ப்ரீ ஹான்ட் ) வண்ணமிட்டு வண்ணக் கோலங்களாக மாறும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக மாறுகிறது. இவ்வகைக் கோலங்கள் வண்ணப் பூக்களால் அலங்கரித்து,அழகு படுத்தி பார்க்கும் கேரளா மக்கள் மத்தியில் இது 'அத்திப்பூ  கோலங்கள்' என்றைழைக்கப்படுகிறது. ஓணம்  பண்டிகையின் விசேஷமான கோலங்கள் இவ்வகை அத்திப் பூ கோலங்களே.

வட இந்தியாவில் கோலம் ரங்கோலி என்றைழக்கப் படுகிறது. வண்ணப் பொடிகள் கொண்டு கோலமிடும் பழக்கம் இங்கிருந்தே பரவியது.

    காலத்தின் மாற்றத்தால் இப்பொழுது கோலமிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வாசல் புறமும் முற்றங்களும் மறைந்து விட்டன. நேரமில்லை என்று மக்கள் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் 'ஸ்டிக்கர்' கோலங்கள் கடைகளில் வந்து விட்டன. எவ்வளவு பெரிய கோலத்தையும் சுருக்கி சிறிய அளவில் ஓட்டும் வழக்கம் பரவி விட்டது. தனி வீடுகள் காணாமல் போய் அடுக்கு மாடி வீடுகள்  வந்து விட்ட பெருநகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் உள்ள வீடுகளின் சிறு வாசலிலே இந்த வகை 'ஸ்டிக்கர்' கோலங்கள் அமர்ந்திருக்கின்றன.

     குந்தன் கற்களால் ஆன அலங்காரமான கோலங்களும் கடைகளில் வந்து விட்டன. பிளாஸ்டிக் பேப்பரில் கோலம் வரைந்து பின் குந்தன் கற்களால் அலங்கரித்து விற்கப்படும் கோலங்கள் நீண்ட நாட்கள் பயன் பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சிறது  சிறிதாக செய்து  கோலங்கள் வேறு வேறு விதமாக சேர்த்து அலங்காரமாகவும் இட முடியும் ."தசரா' சமயங்களில் பூம்மைக் கொலுவில் இப்போழுதல்லாம் இவ்வகைக் கோலங்களை கட்டாயம் காணலாம்.

  இயந்திர யுகத்தில் மக்கள் மன நிலையும் இயந்திரமாகத் தான் இருக்கின்றன. உலகமே கையில் வந்து விட்ட நிலையில் பலவற்றை நாம் இழந்து தான் வருகின்றோம். எக்கால கட்டத்திலும் பெண்களே கலாச்சாரத்தின் பாலமாகவே இருக்கிறார்கள். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கும் கோலங்கள் கூட நம் கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாகவே இருக்கிறது. இடமும், காலமும் இல்லாமல் இருக்கலாம். மனமிருந்தால் போதும். இதும் ஒரு கலை தான். அவசர உலகத்தில் கோலமிடுதல் மன அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்கும். மன உளைச்சலையும் அகற்றும். வீட்டின் முன் வாசலில் இடம் சிறியதாக இருந்தாலும் சிறு கொலமிடுங்கள். மகிழ்ச்சியுடன் வைக்கும் உங்கள் உள்ளங்கள ....

  எலெக்ட்ரானிக் யுகத்தில், இதற்கு மென்பொருளும் வந்த விட்டது. வலை தளங்களில் கொட்டிக் கிடந்தாலும், நம் மனத்  தளங்களுக்கு கொண்டு வருவோம். கோல அச்சுகள் அதிகம் வந்து விட்டாலும், அதைக் கொண்டே கோலங்களை மெருகேற்றுவோம். அச்சுகள் இட்டு அதைச் சுற்றியோ அல்லது அங்கமாகக் கொண்டோ, புதுக் கோலங்களை படைப்போம். நம் பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்துவோம்.புதுப் பொலிவோடு நம் அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோம்.





No comments:

Post a Comment