Wednesday, July 10, 2019

பழ மொழியும் விளக்கங்களும் ...



1.  பட்டும் பாழ், நட்டும் சாவி .

     இது விவசாய்களின் மத்தியில் கிராமங்களில் புழங்கும் பழமொழி...
விவசாயத்தில் இழப்பு ஏற்படும் போது கூறப்படுவது .

 பட்டும் பாழ்- பாடு பட்டது (உழைத்தது ) எல்லாம் வீண்
 நட்டும் சாவி - நட்ட பயிர்கள் எல்லாம் விளையாமல்  பதர்கள் ஆகுவது. (சாவி என்பது முற்றாத நெற்க் கதிர்களை குறிக்கும்.)

கடுமையாக உழைத்தும் நம்மால் சில நேரங்களில் வெற்றி பெற முடியாமல் ..போவதை குறிக்கும் பழ மொழி ..

2. கொடுக்கிறது உழக்குப்பால் , உதைக்கிறது பல்லு போக.

     இதுவும் கிராமத்து பழ மொழி தான்...வீடுகளில் வளருக்கும் பசு / எருமை  மாடுகளில் பால் கறப்பது பெரிய விஷியமாக இருக்கும் ...காரணம் பால் கறக்கும் போது மாடுகள் உதைக்கும்...உதைத்தாலும் நாம் விட்டு விடுவோமா....குறைந்த பாலாக இருந்தாலும் உதை பட்டாவது ...கறந்து விட மாட்டோமா ... அதற்குத் தான் இந்த  பழமொழி ...

   சில நேரங்களில் நம் வாழ்க்கையில் இப்படித்  தான்... சிறிய  பலனிற்காக ....நிறைய துன்பங்களை அனுபவிப்பது....

3. கை காய்த்தால் கமுகு (பாக்கு ) காய்க்கும்.

     இதுவும் கிராமத்து பழ மொழி தான்....பாக்கு (மரம்) பயிரிட்டால் அதை நன்கு பராமரிக்க வேண்டும்...கைக்கு தான் அதிக வேலை...கை காய்த்துவிடும் என்பார்கள்..
வேலை.. செய்து செய்து கைகள் கருப்பாக (வேலை செய்ததின் அடையாளம் ) இருக்கும்.ஆனால் பாக்கு நன்கு காய்த்து பலன் கொடுக்கும்..

    கடின உழைப்புக்கு என்றும் நல்ல பலன் தான் கிடைக்கும் ...

4.  மேய்த்தால் கழுதை  மேய்ப்பேன் , இல்லாது  போனால் பரதேசம் போவேன் . 

       மேய்ப்பது என்றால் .. ஆடு ..மாடு ..இவற்றைத் தான் குறிக்கும் ..மிஞ்சி போனால் வாத்து..கோழி ..இவற்றைஎல்லாம் கூட சொல்லிக்கொள்ளலாம் ...கழுதையை பற்றி கேள்வி பற்றிருக்கிறோமா....அந்த வேலை கிடைக்காவிட்டால் ..வேறு ஊருக்கு சென்று விடுவேன்
(சுற்றி திரிவேன்) என்று கூறுவது அபத்தம் அல்லவா ...

  இப்படித்தான்..சிலர் நம்மில் இருக்கிறார்கள் ..எத்தனையோ முக்கியமான , தேவையான  விஷியங்கள் ..இருந்தாலும் தேவையில்லாத செயல்களை செய்வார்கள்...
இதற்குத்தான் இந்த பழ மொழி...

5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம்  பார்க்கிறதா?
   
     மனிதனின் உருவ அழகை நிர்ணயிப்பதில் முடியின் பங்கும் முக்கியம். முடியுள்ள தலைக்கும், முடியில்லா தலைக்கும் நிறைய வேறுபாடு  இருக்கிறது...தலையில் பார்த்துயிருப்பீர்கள் ....சுழி ஒன்றோ அல்லது இரண்டோ ..இருக்கும் ..
    முடி இருந்தால் போதும்.. எனும் போது  தலையில் உள்ள சுழி, முடி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு அல்லவா..

 மனிதர்கள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.உதவி பெரும் நிலையில் உள்ளவர்கள் ..உதவியை பெற்றவுடன் , இப்படி உதவிருக்கலாம்.. அப்படி உதவிருக்கலாம் என்று
நினைப்பது ..

6. பார்க்கக்   கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

   ஒரு  பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி செயல் படுவது ... வெள்ளிக்கிழமை என்றால் ஒரு சிலர் பணம், பொருள் எதையும் தரமாட்டார்கள். செலவும் செய்ய மாட்டார்கள். இது அவரவர் நம்பிக்கை விஷயம். எண்ணிப் பார்த்து சொல் என்று ஒருவர் கொடுத்த பணத்தை .."இன்று வெள்ளிக்கிழமை ...தரமாட்டேன்.." என்று சொல்வது அபத்தம் அல்லவா..

    சில  மனிதர்களின் நம்பகத்தன்மையும் இப்படித்தான்....

7. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் , அதுவும் ஒரு வரிசை என்பான்.

     கரடி என்ற சொல்லின் திரிபு தான் கெரடி . கரடி என்றால் சிலம்பம் என்று பொருள்.
வரிசை என்றால்  முறை,ஒழுங்கு, வகை என்று பொருள். சிலம்பம் கற்றவன் ஆடும் போது இடறி விழுந்தாலும் , அதைத்  தவறாக ஒப்புக்கொள்ளாமல் அதையும் ஒரு வகை என்று கூறுவது தான் இதன் பொருள் .

 மனிதர்கள் எத்தனையோ பேர் ...இப்படித்தான் இருக்கிறார்கள்.தவறி செய்யும் தப்பை  ஒப்புக்கொள்வதில்லை..

8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையில் விட்டால் தண்ணீர்.

    ஏற்றத் தாழ்வு ....நிறைவு....குறைவு ... இதை உணர்த்துவது தான் இந்த பழ மொழி ...
நீர் ஒன்று தான்..இது  சங்கிலே இருக்கும் போது தீர்த்தம்...மண்ணாலான மொந்தையில் இருக்கும் போது வெறும் நீர் தான் ...

   சமூகத்தில் உயர்வான மற்றும் சாதாரண இடத்தில் இருப்பவர்கள்  சொல்லும், செயலும் ஒரே மாதிரி உணவரப்படுவதில்லை..

9. வாழைப் பழம் கொண்டு  போனவள் வாசலில் இருந்தாள் , வாயைக் கொண்டுபோனவள் நாடு வீட்டில் இருந்தாள் .


  'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் '.  மேல சொல்லப்பட்ட பழ மொழியின் சுருக்கம் இது தான். பிற இல்லங்களுக்கு செல்லும் போது பழங்கள் வாங்கிச் செல்வது ஒரு மரபு.மரபை கடைபிடிப்பவர்கள் பலராக இருந்தாலும், ஒரு சிலர் இவர்களை பின்னுக்குத்   தள்ளி, வாய் ஜாலத்தினால், மிகுந்த முக்கியமானவர்கள் போல வீட்டின் உள்ளே அமர்ந்திருப்பார்கள். சிலர் பேர் பேசியே வசியம் செய்து விடுவார்கள்..
       இன்றைய சமுதாயத்தில் ..இவர்கள் ஏராளம்...

10. நேற்று வெட்டின கிணற்றிலே , முந்தாநாள் வந்த முதலை போல .

     நேற்று வெட்டின கிணற்றிலே,முந்தா நாளே முதலை வருவதற்கு சாத்தியம் இருக்கிறதா ?
 சாத்தியம் இல்லாத ஒன்றை ...சாத்தியம் என்று சொல்லும் மனிதர்கள் இன்று ஏராளம்...ஏமாந்து போகும் மனிதர்களும் அதிகம்...பிரித்து அறியவே இம்மொழி ....



No comments:

Post a Comment