மனம் இடதாகவும் இல்லை, வலதாகவும் இல்லை. அது நடுநிலையில் இருந்தது. நிகழ்காலத்தில் மனம் இருப்பதே நடுநிலையில் இருப்பது.
நடுநிலையில் மனம் இருந்தால்தான், தன்னை புரிந்து கொள்வதும், தனக்கு எதிரே இருப்பதை புரிந்து கொள்வதும் எளிதாக முடியும்.
லாபம் கருதிய எதிர்காலத்திலும், கோபமுள்ள கடந்த காலத்திலும் மனம் இருக்குமாயின் எதிரே இருப்பவரைப் பற்றிய அபிப்ராயங்கள் குளறுபடியாகத்தான் இருக்கும்.
ஏன் எதிரே இருப்பவர் பற்றிய அபிப்ராயம் முக்கியம்? வாழ்க்கை தொடர்புடையது. "லைஃப் இஸ் ரிலேஷன்ஷிப்." எல்லோரோடும், எப்பொழுதும் தொடர்பு கொள்வதுதான் வாழ்க்கை.
இந்த தொடர்பு கொள்ளுதல்தான் வாழ்க்கை எனில் எதிராளியைப் பற்றிய முழுமையான அறிவு ஒருவருக்கு வேண்டும். அந்த அறிவு நடுநிலையில் இருக்கும்போதுதான் மிகச் சரியாக இருக்கின்றது.
அவரை பற்றிய கடந்தகால செய்தியோ, அவரால் அடையக்கூடிய லாபம் பற்றிய எதிர்கால செய்தியோ நமக்குள் வருமாயின் அவரோடு தொடர்பு கொள்ளுதல் தவறாக போகும். தொடர்புகள் தப்பு தப்பாக இருக்கும்.
இப்படி இருப்பதற்கு பதில் தொடர்பற்று இருப்பதே உத்தமம். ஆனால் தொடர்பு கொள்ளத்தான் வேண்டும். தொடர்பு கொள்வதுதான் வாழ்க்கை. தொடர்பில்லாமல் இருக்க முடியாது.
மரணபரியந்தம் வரையில் ஒரு மனிதன் தன் சக மனிதனோடு, தாவரத்தோடு மற்றும் விலங்குகளோடு, உயிரினங்களோடு தொடர்பு கொள்ளத்தான் வேண்டும். நிர்ப்பந்தம். புவி வாழ்க்கையின் விதி.
எனவே நிகழ்காலத்தில் இருப்பது அதாவது நடுநிலையில் இருப்பது என்பது மிகப்பெரிய அமைதியின் பாற்பட்டு தான் வரும். மனம் ஓயாது கூவிக் கொண்டிருப்பதை நிறுத்த உள்ளுக்குள்ளே தன் பார்வையை திருப்ப வேண்டும்.
உள்ளுக்குள்ளே தன் பார்வையை திருப்ப ஒரு அமைதி வேண்டும். அந்த அமைதியையும், தன்னை தான் பார்க்கின்ற பார்வையையும் அப்படி பார்த்து கனிந்த குருவால்தான் கொடுக்க முடியும்.
இது சொல்லி தெரிவதல்ல. இது வகுப்பறை பாடமல்ல. இதற்கு புத்தகங்கள் கிடையாது. ஒரு குரு தனக்குள் மூழ்கி, தன்னுள் கெட்டிப்பட்டு நிற்கின்ற ஒரு முனிவர், மகாமனிதன், மகாத்மா.
தன் எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற, இதே விஷயத்தை வேண்டுகின்ற மனிதனுக்கு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் வாரி வழங்குகிறார்.
மிக அற்புதமாக அவருக்குள் இருந்த அந்த கருணை அன்பு எதிரே இருப்பவர் மீது பொழிந்து மனதை ஒருமைப்படுத்தி உள்ளுக்குள்ளேயே போக வைக்கிறது.
மனதை ஒருமைப்படுத்தி உள்ளே போய் கெட்டிப்பட்ட நண்பரால் மனிதரால் எதிரே இருப்பவரை அவ்விதமே மாற்ற முடியும்.
No comments:
Post a Comment